Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 ஆகஸ்ட் (ஹி.ச)
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது 2025-ஆம் ஆண்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் ஆவணங்களுடன் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலவிஜய், தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார். மேல்மங்கலத்தில் அவருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை கட்டதேவன் என்பவர் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது சொத்துகளை விற்பனை செய்ய முயன்றபோது, கட்டதேவன் மற்றும் அவரது உறவினர்கள் பாலவிஜய் போல ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்துகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்ததாக பாலவிஜய் புகார் அளித்தார்.
இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கட்டதேவன், ஈஸ்வரன், அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர்கள் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மாவாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ள நிலையில்,
அதுதொடர்பான ஆவணங்களுடன் தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்.
மேலும், ஜஸ்டின் மணிகண்டனிடம் ஏற்கனவே சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் இதுவரை பணியாற்றிய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஆவணங்களையும் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam