சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு நாளில் வாகன சாகசம் - போக்குவரத்து பாதிப்பு
சேலம், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த இளைஞர்கள் சாலையில் வாகன சாகசங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏ
தீரன் சின்னமலை


சேலம், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த இளைஞர்கள் சாலையில் வாகன சாகசங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர்.

காலை நேரத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் தீரன் சின்னமலை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர்.

அப்போது, யுவராஜின் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் சங்ககிரி சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்ததுடன், நான்கு சக்கர வாகனங்களின் மீது ஏறி சாகசங்களில் ஈடுபட்டனர்.

மேலும், சிலர் இருசக்கர வாகனங்களிலும் ஆபத்தான முறையில் சாகசம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலையில் சென்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அதிவிரைவுப் படை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று லத்திகளுடன் எச்சரிக்கை விடுத்து கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து சாலையில் திரண்டிருந்த இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தச் சம்பவம் சங்ககிரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam