தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக 11வது பட்டமளிப்பு விழா - ஆகஸ்ட் 17-ல் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
திருவாரூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சி
சிபி ராதாகிருஷ்ணன்


திருவாரூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது.

இப்பல்கலைக்கழகத்தில் 64-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

பின்னர் கார் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

விழாவில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும் பட்டங்களையும் துணை குடியரசுத் தலைவர் வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்.

துணை குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து விழாவுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam