டெல்லி செல்லும் வழியில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்த பட்டதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்- வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) டெல்லியில் காவிரி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தடுத்து நிறுத்தி மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பிய சம்பவத்த
Velmurugan


Bb


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

டெல்லியில் காவிரி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தடுத்து நிறுத்தி மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்லி நோக்கி ரயிலில் பயணம் செய்த தமிழக விவசாயிகளை நாக்பூரில் மகாராஷ்டிர காவல்துறையினர் கட்டாயமாக ரயிலிலிருந்து இறக்கி, தமிழகத்திற்கே திருப்பி அனுப்பியது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்க ஜனநாயக விரோதச் செயல் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு, நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று அமைதியான முறையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமையையே பறிக்கும் வகையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது, விவசாயிகளின் உரிமைகள் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழக விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல என்றும், தங்களது வாழ்வாதாரத்தையும் காவிரி நீர் உரிமையையும் காக்க ஜனநாயக வழியில் போராடச் சென்றவர்களை வழிமறித்து சொந்த மாநிலத்திற்கே திருப்பி அனுப்பியது, கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயக மாண்பிற்கும் எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை தமிழக அரசு சாதாரண நிகழ்வாகக் கருதி அமைதியாக இருக்கக் கூடாது என்றும், உடனடியாக மகாராஷ்டிர அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்வதுடன், ஒன்றிய அரசின் கவனத்திற்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்று, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக விவசாயிகளின் ஜனநாயக உரிமையைப் பறித்த மகாராஷ்டிர காவல்துறையின் நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள வேல்முருகன், விவசாயிகளின் உரிமையையும் தமிழ்நாட்டின் உரிமையையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ