Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேகதாது அணை கட்டுமானத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காவல்துறை கைது செய்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் பயணம் செய்த தமிழ்நாட்டு விவசாயிகளை, நாக்பூரில் மகாராஷ்டிர காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் தொடக்கம் முதலே மத்திய நீர்வளத் துறை கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், அந்தப் போக்கை கண்டித்தே தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்ததாக கூறியுள்ளார்.
ஆனால், விவசாயிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே, அவர்களை நாக்பூரில் இறக்கிவைத்து, தமிழ்நாட்டிற்கே திரும்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளை கைது செய்தது குறித்து மகாராஷ்டிர அரசிடம் விளக்கம் கேட்டு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டெல்லி சென்று அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ