விவசாயிகளை வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு வைத்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்
Udhayanidhi Stalin


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றும், காவிரி நீர் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், பாசன வசதிகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்சினைகளில் அரசு போதுமான அக்கறை காட்டவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த டெல்லிக்குச் செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கும் மாநில அரசு உரிய கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் திமுக விமர்சித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும், காவிரி தொடர்பான உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தின் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதே நோக்கம் என திமுக தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி, விவசாயிகள் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ