Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தவெக தலைமையிலான தமிழக அரசின் வெற்றி தமிழகம் பார்வை ஆவணத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வி, சமூக நீதி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரூ.50,000 கோடி மதிப்பிலான மாநில முதலீட்டு நிதியை உருவாக்குவதற்காக தமிழ்நாடு ஸ்ட்ராட்டஜிக் முதலீட்டு ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் அரையெழுத்து (Semiconductor), மின்சார வாகனங்கள், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் அரசு இணைந்து முதலீடு செய்து, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வருவாய் வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு அரசு சேவைகளை காலவரையறைக்குள் வழங்கும் வகையில் Right to Service Act நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மக்கள் நேரடியாக தீர்மானிக்கும் People's Choice Budget என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.
நலத்திட்டங்கள் வழங்கும் முறையிலும் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் தரவுத்தளங்களை ஒருங்கிணைத்து, தகுதியான பயனாளிகளை தானாக அடையாளம் கண்டு, விண்ணப்பமின்றி அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு Super App உருவாக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் ஒரே செயலி மூலம் வழங்கப்படும்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்காக, இந்தியாவின் முதல் முழுமையான AI நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதில் AI பல்கலைக்கழகம், உயர் திறன் GPU கணினி மையம், அரையெழுத்து சோதனை ஆய்வகங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த திறன் பயிற்சி மையங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறையில், AI, குவாண்டம் கணினி, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறப்புப் பயிற்சி வழங்க பெரியார் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கப்படும். மேலும், உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை அரசு ஏற்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், மாநிலம் முழுவதும் மைக்ரோ-டெக்னாலஜி பூங்காக்கள் மற்றும் கூட்டு வேலை மையங்கள் அமைப்பதற்கும், சமூக நீதி, பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றம், பிராந்திய வளர்ச்சி, வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், கடலோர பாதுகாப்பு, வெள்ள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என பார்வை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P