Enter your Email Address to subscribe to our newsletters

மார்காபுரம் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் மார்காபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
மேற்கு பிரகாசம் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் கடந்த 1996-ம் ஆண்டு வெலிகொண்டா திட்டம் தொடங்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்திருந்த இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்து தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் அளிக்கிறது.
வெலிகொண்டா திட்டம் வெறும் நீர்ப்பாசன திட்டம் மட்டுமல்ல. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், ஃப்ளூரைடு பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரையும் வழங்கும் திட்டமாகும். வேலை தேடி வெளியூர் சென்ற இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கும்.
வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டத்தின் மூலம் சுமார் 1.19 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
மேலும் சுமார் 4 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும்.
நல்லமலா மலைகளை ஊடுருவிச் செல்லும் கால்வாய்கள் வழியாக கிருஷ்ணா நதி நீர் நல்லமலா சாகர் நீர்த்தேக்கத்தை சென்றடைய உள்ளது.
இதன் மூலம் அப்பகுதி மக்களின் பல ஆண்டுகால குடிநீர் மற்றும் பாசனத் தட்டுப்பாடு நீங்கும்.
11 கிராம மக்கள் தியாகம்
இந்த திட்டத்திற்காக தங்களது நிலங்கள், வீடுகள் மற்றும் பிறந்த கிராமங்களை தியாகம் செய்த 11 கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
வெலிகொண்டா திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியின் வளர்ச்சி மேலும் வேகம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி நாளை நடைபெறும் ‘வெலிகொண்டா விழா’வில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA