Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், விசாகப்பட்டினத்தில் ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டராலஜி (ஏ.ஐ.ஜி.) சார்பில் பிரமாண்ட மருத்துவமனை அமைக்கப்படுகிறது.
ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் இந்த மருத்துவமனைக்கு எண்டாடா பகுதியில் நாளை (திங்கட்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
இதில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
விசாகப்பட்டினத்தை சர்வதேச தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்தும் நடவடிக்கைகளில், உயர்தர மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதும் முக்கிய திட்டமாக உள்ளது.
அந்த வகையில், ஏ.ஐ.ஜி. மருத்துவமனை அமைவது வட ஆந்திர மக்களுக்கு மட்டுமின்றி, ஒடிசா எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1,000 படுக்கைகள்
எண்டாடாவில் 9 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை வளாகமும், அருகில் 2.5 ஏக்கர் பரப்பளவில் நர்சிங் கல்லூரியும் அமைக்கப்பட உள்ளன.
மருத்துவ சிகிச்சையுடன் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான வசதிகளையும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் டவர்-ஏ மற்றும் டவர்-பி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு 650 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். இந்த பணிகளை 2028-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2-வது கட்டத்தில் டவர்-சி கட்டப்பட்டு மேலும் 350 படுக்கைகள் சேர்க்கப்படும். இதன் மூலம் மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி 1,000 ஆக அதிகரிக்கும்.
மேலும் தினமும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுமார் 1,000 டாக்டர்கள் இங்கு பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9,000 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த மருத்துவமனை திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவமனை கட்டுமானம் மற்றும் செயல்பாடுகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 9,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 சிறப்பு மருத்துவ மையங்கள்
ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையின் தரத்துக்கு இணையாக விசாகப்பட்டினம் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
8 சிறப்பு மருத்துவ மையங்களுடன், 50-க்கும் மேற்பட்ட மருத்துவ சிறப்புப் பிரிவுகள் இங்கு செயல்பட உள்ளன.
தாய்-சேய் நலனுக்காக தனிப்பிரிவும் அமைக்கப்படுகிறது.
மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி மருத்துவ ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மையம் அமைக்கப்பட உள்ளது.
நர்சிங் கல்லூரி, பாராமெடிக்கல் பணியாளர்களுக்கான பயிற்சி மையம், ஊழியர்களுக்கான விடுதி, 500 பேர் அமரும் அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
வெளியிடங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
மருத்துவத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஏ.ஐ.ஜி., இரைப்பை மற்றும் குடல் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபி சேவைகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் ஏ.ஐ.ஜி. மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், வட ஆந்திர மக்கள் உயர்தர சிகிச்சைக்காக ஐதராபாத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை கணிசமாக குறையும்.
இதன் மூலம் விசாகப்பட்டினம் மாநிலத்தின் முக்கியமான மருத்துவ மையமாகவும், எதிர்காலத்தில் சிறந்த ‘ஹெல்த்கேர் ஹப்’ ஆகவும் உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA