அரக்கோணத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை?
ராணிப்பேட்டை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (26), தனது கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இரு மகன்களுடன் வடமாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கல் உடைக்கும் தொழில் செய்து தனது இ
Arakkonam Junction


ராணிப்பேட்டை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (26), தனது கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இரு மகன்களுடன் வடமாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

கல் உடைக்கும் தொழில் செய்து தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வள்ளி தனது 7 வயது மகன் பரத் மற்றும் 3 வயது மகன் சந்தோஷ் ஆகியோருடன் அரக்கோணம்–திருத்தணி ரயில் பாதை அருகே சென்றுள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சித்தனூர் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வள்ளி தனது கணவர் இறந்த துயரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் குழந்தைகளுடன் ரயில் முன்பு சென்றாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி உயிரிழந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN