Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியின் 137-வது “மனதின் குரல்” நிகழ்ச்சி தேசிய உணர்வு, சமூக அக்கறை, இளைஞர் நலன், பெண்கள் முன்னேற்றம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம், தேசிய விண்வெளி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாள், பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும் ஆகஸ்ட் மாதம், இந்தியர்களின் மனதில் தேசிய உணர்வை விதைப்பதாக பிரதமர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “வந்தே மாதரம்” பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும், “ஹர் கர் திரங்கா”, “சூர்யபத் திரங்கா” உள்ளிட்ட பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடையே தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தையும் சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசு முன்னெடுத்துள்ள “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான, போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற பிரச்சாரத்தில் இளைஞர்கள் தீவிரமாக இணைந்து வருவதை பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளின் ஆபத்துகளை எடுத்துரைத்த பிரதமர், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள 35 லட்சம் பெண் தொழில் முனைவோர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் “பி.எம். ஸ்வநிதி யோஜனா” திட்டம் குறித்தும் பிரதமர் பேசியதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வெளிப்பாடாக இருந்தது. நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி, மக்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் நரேந்திர மோடி தேசத்திற்கு கிடைத்த வரம் என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P