Enter your Email Address to subscribe to our newsletters

வெனிசுலா, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
அமெரிக்காவுடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும், இதன் மூலம் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை இயற்கை வளங்கள் மீதான நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியதாவது,
அமெரிக்காவுடனான எரிசக்தி ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஆகும். இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.
இந்த 25 ஆண்டு கால இருதரப்பு திட்டம், நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான உற்பத்தி இலக்குடன் 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது.
இந்த எண்ணிக்கை வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்துடன் மட்டுமே தொடர்புடையது.15 லட்சம் பீப்பாய் என்ற இலக்கு ஆரம்பகட்ட இலக்கு மட்டுமே. பரந்த திட்டத்தில் நாட்டின் எரிசக்தித் துறையை விரிவுபடுத்தும் பகுதியாக எட்டு புதிய எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதும் அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் நலிவடைந்த எரிசக்தித் துறையை மீட்டெடுக்க அமெரிக்க நிறுவனங்கள் உதவ முடியும். அதேவேளை அமெரிக்காவில் எரிபொருள் விலையைக் குறைக்க புதிய கச்சா எண்ணெய் ஆதாரத்தை வழங்க முடியும்.
வெனிசுலாவின் பரந்த எண்ணெய் இருப்புகளில் ஒரு பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிவித்தார்.
தனியார் வணிக நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் வெனிசுலாவின் நிரூபிக்கப்பட்ட 6500 கோடி பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய் இருப்புகளில் பெரும்பான்மை கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றுள்ளதாக டிரம்ப் கூறியதைத் தவிர ஒப்பந்தம் குறித்து சில விவரங்களை மட்டுமே வழங்கினார்.
வெனிசுலா உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக முதலீட்டுக் குறைபாடு, தவறான நிர்வாகம் மற்றும் தடைகள் காரணமாக அதன் உற்பத்தித் திறனை விட மிகக் குறைவாக, நாளொன்றுக்கு சுமார் 12.5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற ரோட்ரிக்ஸ், இது பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் மற்றும் அரசின் வருவாயை அதிகரிக்கும் என்றார்.
அமெரிக்க நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு புதிய எண்ணெய் ஆய்வு மற்றும் உற்பத்தி உரிமைகளை வழங்கும் ஒப்பந்தங்களில் அடுத்த வாரம் கையெழுத்திட வெனிசுலா அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b