Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் தாமிரபரணி நதியின் தூய்மை, நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு! நம்ம ஆறு!! என்ற மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப் பணிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தன் ஒரு பகுதியாக, இன்று (30.08.2026) தாமிரபரணி பிறந்த பாபநாசம் முதல் அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை சுமார் 126 கிலோமீட்டர் தூரத்திற்குச் சைக்கிள் பசுமைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தன்னார்வலர்களான மு.சுகன், ஜி.எஸ்.கணேஷ் ராகவ், ஜெய்கணேஷ், சுரேஷ், ராஜா, மாரி ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் இந்த விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இப்பயணத்தை வீ த லீடர்ஸ் தன்னார்வலர் ச.வேல்கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த 126 கி.மீ. பயணத்தின் போது, தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், ஆற்றின் கரையோரங்களில் மரங்களை வளர்க்கும் நோக்கில் விதைப்பந்துகளும் வீசப்பட உள்ளன.
முன்னதாக, பாபநாசநாதர் திருக்கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீ த லீடர்ஸ் தன்னார்வலர் ச.வேல்கண்ணன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
Hindusthan Samachar / vidya.b