Enter your Email Address to subscribe to our newsletters

லடாக் , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
லடாக்கின் நன்-குன் மலைத்தொடரில் சுமார் 18,600 அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த நபரை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாகசமாக மீட்டனர்.
பனிப்புயல், கடுமையான காற்று மற்றும் அடர்ந்த பனி சூழ்ந்த செங்குத்தான மலைப்பகுதியில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் உயரமான அந்த பகுதியில் ஹெலிகாப்டரை முழுமையாக தரையிறக்க போதிய இடவசதி இல்லாததுடன், பலத்த காற்றும் வீசியது. இதனால் பைலட்டுகள் மிகுந்த சவால்களுக்கு இடையே ஹெலிகாப்டரை இயக்கினர்.
ஹெலிகாப்டரின் ஒரே ஒரு சறுக்கு கட்டையை மட்டும் பனியின் மீது தொட்டவாறு அந்தரத்தில் நிலைநிறுத்தி, கயிற்றின் உதவியுடன் ஆபத்தில் சிக்கியிருந்த நபரை பத்திரமாக மீட்டனர்.
18,600 அடி உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருப்பதால் ஹெலிகாப்டரை இயக்குவது சவாலானதாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, ஹெலிகாப்டரில் இருந்த தேவையற்ற உபகரணங்கள் அகற்றப்பட்டு அதன் எடை குறைக்கப்பட்டது. மேலும், குறைந்த அளவிலான எரிபொருளுடன் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் சூரிய வெளிச்சம் முழுமையாக மறைவதற்கு முன்பு கிடைத்த குறுகிய நேரத்திற்குள் மீட்பு நடவடிக்கை துல்லியமாக திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
இந்த அசாத்தியமான மீட்பு நடவடிக்கையின் காணொலியை இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ஃபியூரி கார்ப்ஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் மனித உயிரைக் காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA