Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த 32 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழனி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியை கடந்து செல்லும்போது, போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் 6 பண்டல்களில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த பண்டல்களில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 6 கிலோ எடையுள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு (32) என்பது தெரியவந்தது.
மேலும், பெங்களூரு மடிவாளா பகுதியில் இருந்து போதைப்பொருளை பெற்று, உடுமலைப்பேட்டை பகுதிக்கு கடத்திச் செல்ல முயன்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரகுவை கைது செய்த போலீசார், போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த போதைப்பொருள் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது, இதன் பின்னணியில் செயல்படும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN