Enter your Email Address to subscribe to our newsletters

நாகர்கோவில், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மா (70), வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், அரிசி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
வழக்கமாக காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று வியாபாரம் செய்யும் சின்னம்மா, இன்று வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அவரது பிள்ளைகள், சின்னம்மாவைத் தேடி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்குள் அவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததுடன், உடல் சிறிதளவு எரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னம்மா அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர் வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்த மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வீட்டிற்குள் புகுந்து சின்னம்மாவை கொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P