நீதிமன்ற உத்தரவுப்படி அமராவதி நீரை திறக்க வேண்டும் – எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தல்
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச) கரூர் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் உடனடியாக நீர் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிம
Jothimani


Nn


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)

கரூர் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் உடனடியாக நீர் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்ட மக்கள் தற்போது மிகக் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் இதுவரை ஒரு முறைகூட நீர் திறக்கப்படவில்லை.

மழையின்றி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீருக்கே மக்கள் தவிக்கும் அவசர சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீர்வளத்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், கரூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்றம் கடந்த 29.08.2026 அன்று அமராவதி அணையிலிருந்து 10 நாட்களுக்கு படிப்படியாக நீர் திறக்க உத்தரவிட்டதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் தலா 3,000 கனஅடி, மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் தலா 2,000 கனஅடி, ஐந்தாவது மற்றும் ஆறாவது நாட்களில் தலா 1,500 கனஅடி, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் தலா 1,000 கனஅடி, ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாட்களில் தலா 750 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் தினமும் 1,000 கனஅடி வீதம் மட்டுமே நீர் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாண்புமிகு உயர்நீதிமன்றம் முதல் இரண்டு நாட்களிலேயே தலா 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தினமும் 1,000 கனஅடி மட்டுமே திறக்கப்படும் என்ற அரசின் முடிவு கரூர் மக்களின் அவசர குடிநீர் தேவையை நிறைவேற்றாது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நீர் கிடைக்காமல் தவித்து வரும் கரூர் மக்களுக்கு இது மீண்டும் அநீதியாக அமையும் என்றும், 1,000 கனஅடி நீர் திறப்பதன் மூலம் கரூர் மாவட்டத்திற்கு தேவையான அளவு நீர் சென்றடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரியில் மட்டுமல்லாமல் கடைமடைப் பகுதியில் உள்ள கரூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அமராவதி ஆற்றின் நீர்ப்பங்கீட்டிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“நாங்கள் கேட்பது கரூர் மாவட்டத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பங்கீட்டை மட்டுமே. கரூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீருக்கான அவசர நிலையை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய அரசாணை வெளியிட்டு, உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் மக்களின் குடிநீர் உரிமையை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ