Enter your Email Address to subscribe to our newsletters

கொச்சி , 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளா மாநிலம்,
கொச்சி குன்னம்புரம் பகுதியில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் ரவுல் ஜான் அஜு.
சிறு வயது முதலே ஏஐ தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர், இதுவரை 15-க்கும் மேற்பட்ட ஏஐ தயாரிப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரவுலின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐ.பி.எம். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தந்தையின் தொழில்நுட்ப பின்னணி காரணமாக, ரவுலுக்கு 9 வயதிலேயே ஏஐ தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து அதுகுறித்து கற்றுக்கொண்ட அவர், தனது சொந்த முயற்சியில் பல்வேறு ஏஐ கருவிகளை உருவாக்கத் தொடங்கினார்.
இதன் அடுத்தகட்டமாக ‘ஏஐ டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய ரவுல், தற்போது அதில் 15 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளார்.
அவர்களில் தனது தந்தை அஜு ஜோசப்பும் ஒருவர். அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிடம் ஏஐ மற்றும் தொழில்நுட்ப அறிவு இருந்தபோதிலும், முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய தனது தந்தையின் தொழில்நுட்ப அனுபவத்தையும், நிர்வாக அறிவையும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை தனது நிறுவனத்தில் பணியமர்த்தியதாக ரவுல் தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் பலரும் பெற்றோரிடம் பணம் கேட்டு செலவழித்து வரும் நிலையில், 16 வயதிலேயே சொந்தமாக ஏஐ நிறுவனம் தொடங்கி, அதில் தனது தந்தைக்கே ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கிய ரவுலின் முயற்சி பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA