Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ மளமளவென பரவி அதிகளவில் எரிந்து வருகிறது.
தீ விபத்து காரணமாக குப்பைகளில் இருந்து கரும்புகை வானுயரத்திற்கு பரவி வருகிறது. மேலும், குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள் எரிவதால் கடும் துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருகில் உள்ள தமிழன் நகர், அன்னை சத்யா நகர், ஜே.ஜே. நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழுத் தலைவர் நேதாஜி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் மணலி மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குப்பை மேடுகளில் தீ தொடர்ந்து எரிந்து வருவதால், தீயை முழுமையாக அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam