Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் குறைகள் குறித்து அமைச்சர் நேரில் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது, சில கழிவறைகளில் கதவுகள் உடைந்தும், முறையான பராமரிப்பின்றியும் இருந்ததை கண்டு அதிருப்தியடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்த சுகாதார ஆய்வாளரை கடிந்து கொண்ட அமைச்சர், அனைத்து கழிவறைகளையும் உடனடியாக சுத்தமாகவும், நோயாளிகள் பயன்படுத்தும் வகையிலும் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான நரம்பியல் மற்றும் இருதய சிகிச்சை மருத்துவர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
கிருஷ்ணகிரியில் தனித்தனியாக செயல்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முருந்தன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam