Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கடங்கநேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன், தனது குடும்பத்தினருடன் குற்றால அருவிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது அவரது 13 வயது மகள் சுபாரெஷி அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த சுற்றுலா பயணிகள், சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு கூச்சலிட்டனர். ஆனால் அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர் ஒருவர் விரைந்து சென்று காயமடைந்த சிறுமியை தூக்கிக்கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
குற்றால அருவியில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், அவசர காலங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அடிப்படை அவசரகால வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, குற்றால அருவி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால மருத்துவ வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam