Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி – தவமணி தம்பதியரின் 16 வயது மகள் நிஷாந்தி.
இவர் ஏற்கெனவே பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்திருந்த நிலையில், நர்சிங் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக வேறு பள்ளியில் சேருவதற்கு முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தனது தாயுடன் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு மாணவி சென்றுள்ளார். அங்கு பள்ளித் தலைமையாசிரியையிடம் சேர்க்கை தொடர்பாகப் பேசியபோது, மாணவியின் தாய் கைகூப்பி நின்றதாகவும், அதனை மாணவி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தலைமையாசிரியை மாணவியை கண்டித்ததாகவும், சாதி ரீதியாக அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் மாணவியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சந்தேக மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை விமலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமையாசிரியை கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதுடன், இந்த விவகாரத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில்,ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பான கல்விச்சூழல் கிடைப்பது அவர்களின் உரிமை என்றும், எந்தக் குழந்தையும் இதுபோன்ற மனவேதனைக்கு தள்ளப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P