Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திமுக ஆட்சிக் காலத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த விவசாயிகள் விரோத வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய அரசு கனிமங்களை எடுக்க முயன்றபோது, “முதல்வர் பதவியை இழந்தாலும் அரிட்டாபட்டியில் கனிமங்களை எடுக்க அனுமதிக்க மாட்டேன்” என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறையை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றதை கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டு வர “தைரியம் இருக்கிறதா முதல்வர் விஜய் அவர்களே?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததால் ரூ.5,000 கோடிக்கும் மேல் தமிழகத்திற்கு நிதி வழங்க ஒன்றிய அரசு மறுப்பதாகக் கூறியுள்ள அப்பாவு, இதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர துணிவு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதலைப் பெற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டப்படி தடை செய்ததாகக் குறிப்பிட்ட அப்பாவு, அதேபோல் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாத அளவுக்கு தற்போதைய அரசு சுயநலமாக செயல்படுகிறதா என்றும் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P