Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் நேரிட்ட இயற்கை பேரழிவு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 46), அங்கே செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“கைலாஷ் மானசரோவர் செல்வது வாழ்நாளில் ஒரு கனவாக இருந்த நிலையில், அது நனவாகி கடந்த ஆறு மாதமாக இதற்காக பிரார்த்தனை செய்து வந்தோம்.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி கும்பகோணம் சூப்பர் யாத்ரா ட்ராவல்ஸ் மூலமாக பயணம் மேற்கொண்டோம்.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டதுடன் ஷியாகுல் என்ற இடத்திற்கு சென்று தங்கி 26-ஆம் தேதி மீண்டும் பயணத்தை தொடங்கினோம்.
அப்போது, கைரோவ் என்ற எம்பஸிக்கு செல்லும் வழி தடங்கள் முழுவதும் மோசமான நிலையில் இருந்தன.
அதேநேரம் இயற்கையான சூழலை ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கரும் புகை எழுந்தது.
கைரோ எம்பஸிக்கு 3 கிலோமீட்டர் தொலைவு நாங்கள் இருந்தபோது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டிரைவர் இறங்கி சென்றதே தெரியாத அளவிற்கு கரும்புகையுடன் நீரும் கலந்த நிலையில் வந்த வெள்ளத்தில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
நாங்கள் சென்ற வாகனம், ஒரு வளையில் நின்றதால் அனைவரும் பத்திரமாக தப்பித்தோம்.
எங்கள் வாகனத்தில் உள்ள உதவியாளர் முதலில் ஓடினார். அவரை பின்பற்றி நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியுடன் அருகில் இருந்த மலை மீது ஏறி மேலேறி வந்தோம்.
மாயவரத்தைச் சேர்ந்த பூங்குழலி, ரத்தினகுமார் ஆகியோர் சேர்ந்து வாகனத்தில் இருந்தவர்களை வெளியேற்றி மலையேற உதவி செய்தனர்.
பூங்குழலி தனது சேலையை கொடுத்து மற்றவர்களை காப்பாற்றியபோது அவர்கள் எங்களுக்கு சிவன், பார்வதியாகவே தெரிந்தார்கள்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இந்த மீட்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்து எங்களை மீட்டு வந்ததற்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர்களும், தமிழ்நாடு அமைச்சர்களும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததுடன் பழகுவதற்கு எளிமையான முறையில் இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவைத் தாண்டி போனால் தான் இந்தியாவின் அருமை தெரிகிறது. உண்மையிலேயே இந்தியா ஒரு சொர்க்கம்.
சாலைகளாக இருக்கட்டும், அடிப்படை வசதிகளாக இருக்கட்டும் அனைத்திலும் இந்தியா சொர்க்கம் தான்.
இதுபோன்ற பேரிடர் நேரிடும் காலங்களில் மீட்பு பணிகளின் நிலையை அனைவரும் அவ்வபோது தெரிந்து கொள்வதற்காக அரசு ஒரு அவசர எண்ணை அறிவிக்க வேண்டும்.
இதனை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் , பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும் டிராவல் ஏஜென்சிகளுக்கு லைசன்ஸ் வழங்கும்போது அவர்கள் நம்பகத்தன்மை உடையவர்கள் தானா, ஏமாற்றிவிட்டு சென்று விடுவார்களா என்பதனை பார்த்து லைசன்ஸ் வழங்க வேண்டும்.
எங்களது அசல் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்துவிட்ட நிலையில் அவற்றை எங்களது இல்லத்திற்கு கொண்டு வந்து தருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிவரஞ்சனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN