ஆட்கொல்லி புலியை தேடும் பணி 10வது நாளாக தீவிரம் - நீலகிரி ஆட்சியர் நேரில் ஆய்வு
நீலகிரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில், கடந்த இரண்டு வாரங்களில் பாலசுப்பிரமணியம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரை புலி தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உயிருக்கு அச்ச
Lakshmi Bhavya Thaneeru


நீலகிரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில், கடந்த இரண்டு வாரங்களில் பாலசுப்பிரமணியம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரை புலி தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை பிடிக்க தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி புலியை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக சுமார் 130 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ஓவேலி பகுதியில் தொடர்ந்து புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் புலியின் நடமாட்டத்தை கண்டறிய தானியங்கி கேமராக்கள், தெர்மல் ட்ரோன்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புலியின் கால்தடங்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து உதயன் மற்றும் பொம்மன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் புலியை தேடும் மற்றும் கண்காணிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை விரைந்து பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபவ்யா தண்ணீரு அவர்கள் ஒவேலி பகுதியில் புலியை பிடிக்க எடுக்கபட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

Hindusthan Samachar / ANANDHAN