உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் ''மன் கி பாத்'' (மனதின் குரல்) நிகழ்ச்சியின் 137-வது அத்தியாயம் இன்று காலை 11:00 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. இதன் தமிழாக்கம் காலை 11
Modi's appeal on 'Mann Ki Baat'


புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியின் 137-வது அத்தியாயம் இன்று காலை 11:00 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.

இதன் தமிழாக்கம் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பானது.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும், நம் இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தையும் உருவாக்க நாம் ஒன்றிணைவோம். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும்.

நாட்டை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு.

போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப்பழக்கத்தால் அவதிப்படும் தனிநபர்களுக்கு உதவ முன்வருபவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். போதைப்பொருளின் ஆபத்துகளை எடுத்துரைப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து பாடல்கள் மற்றும் சிறு நாடகங்களை உங்களால் உருவாக்க முடியுமா?

பிஎம் ஸ்வநிதி திட்டம், லட்சக்கணக்கான பெண் தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், தங்கள் குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது. தூய்மை என்பது மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

புதிய முயற்சிகளை மக்களின் பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி. இந்த ஆண்டு நடந்த அமர்நாத் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்காக இரவும் பகலும் அயராது உழைத்தனர்.

ஏகாதசியின் புனிதமான நாளில் மும்பையில் வசிக்கும் கிருஷ்ண சேஷாத்ரி பிரத்யேக வெப்சைட் உருவாக்கி இருக்கிறார்.

இவரது இந்த முயற்சி இந்திய வரலாற்றை சுவாரசியமான முறையில் அறிந்து கொள்ள உதவுகிறது. https://www.bharatrajya.com/ என்ற இணையதளத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட ஆண்டை தேர்வு செய்தால் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியை யார் ஆட்சி செய்து வந்தார்கள் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். நாட்டை தன்னிறைவு அடைந்ததாக மாற்றுவதற்கு உறுதியோடு இருக்க வேண்டும்.

நமது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நமது மரபுகளைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Hindusthan Samachar / vidya.b