Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதலே கோவில் அடிவாரம், படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக 45 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதை வழியாகவே பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்றனர். இதனால் மின் இழுவை ரயில் நிலையத்தில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோவில் நிர்வாகம் ஒருவழிப் பாதை முறையை அமல்படுத்தியுள்ளது.
குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், தரிசனம் முடித்த பின்னர் படிப்பாதை வழியாக கீழே இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோவிலில் பொது மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர், மற்றும் கோவில் பாதுகாவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN