மத்திய அரசின் நிதியை பெற தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - வீரபாண்டியன்
பெரம்பலூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.) பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து மழைக்குறைவு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்
Veerapandian


பெரம்பலூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்,

பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து மழைக்குறைவு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதால், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கும்போது பெரம்பலூரையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

பெரம்பலூர் மானாவாரி நிலப்பகுதியாக இருப்பதால் மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மழைக்குறைவால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சனையும், வறுமைச் சூழலும் நிலவுகிறது.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பெரம்பலூர் காவல் நிலையம் அருகே அருணாசலம் டீக்கடையில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் 17 பேர் காயமடைந்து, 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் டீக்கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், பணிமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிலிண்டர் பயன்பாடு குறித்து கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கொடியேற்ற அனுமதி கோரிய நிலையில், காவல்துறை அனுமதி மறுத்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் கொடியேற்றுவது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையாகும்.

விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதியைப் பெற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.

மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர், தொல்குடியினர் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகளைப் பாதுகாப்பதுடன் மனித உயிருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு சட்டரீதியான மேல்முறையீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள புதிய முதலீடுகளை வரவேற்கலாம் என்றாலும், அதன் காரணமாக உள்ளூர் சிறு, குறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், பாரம்பரிய தொழில்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது. விவசாய நிலங்களை பெருந்திட்டங்களுக்காக கையகப்படுத்துவதற்கு பதிலாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்கள், பினாமி மற்றும் கேட்பாரற்ற நிலங்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொதுமக்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்படாத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும்.

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் இடமே தவிர, பழிதீர்க்கும் அல்லது அவதூறு பேசும் இடம் அல்ல. மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதுக்கல், கள்ளச்சந்தை, கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், ஏழை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்து, பால், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய 100 பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN