Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச)
மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் திமுகவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களும் விரக்தியின் உச்சத்தில் கருத்துகளை தெரிவித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் நின்று பிதற்றிக் கொண்டிருக்கும் திமுகவும், அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களது கடந்த கால கொள்கை விளக்கக் குறிப்புகளை திறந்து பார்க்க வேண்டும்.
இ. பரந்தாமன் பேசுவதற்கு முன்பு உரிய ஆதாரங்களை எடுத்துப் பார்த்து உண்மைகளை சரிபார்க்க வேண்டும். கடந்த 2022-2023, 2023-2024 மற்றும் 2024-2025 ஆகிய திமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ கொள்கை விளக்கக் குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் எங்கும் இடம்பெறவில்லை என்பதே உண்மை.
அந்த காலகட்டத்தில் திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது, தங்களது துறை அமைச்சர் கொள்கை விளக்கக் குறிப்புகளை தாக்கல் செய்ததை கவனிக்கவில்லையா? பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்களை கொள்கை விளக்கக் குறிப்புகளில் சேர்க்காமல் இருந்தது ஏன்? அப்போது சமூக நீதி குறித்து பேசாதவர்கள் தற்போது வெட்கம், மானம், ரோஷம் குறித்து பேசுவது எந்த வகையில் நியாயம்?
2026 தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்திற்காகவும், கூட்டணி கணக்குகளுக்காகவும் மெய்யநாதன் மூலமாக பெயர்களை சேர்த்ததாகவும், இந்த நடவடிக்கையின் பின்னணியை மக்கள் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறை திமுகவில் இ. பரந்தாமனுக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு பேசுகிறாரா என்றும் ரூபி ஆர். மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவன் குறித்து விமர்சனம் செய்வதற்கோ அல்லது அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறுவதற்கோ திமுகவினருக்கு என்ன தகுதி உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்களை கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம்பெறச் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் அரசியலுக்காக அவர்களின் பெயர்களை முன்வைத்து பேசுவதாக திமுக மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், சொந்தக் கட்சியின் செயல்பாடுகளை மறைத்துவிட்டு பிறர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் மலிவான அரசியல் இனியும் எடுபடாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ