சஜ்ஜன் குமார் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற பாஜக எம்.பி.க்கள் – கடும் நடவடிக்கை கோரி சீக்கியர் குருத்வாரா நிர்வாகக் குழு கடிதம்
புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஜ்ஜன் குமார் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற 3 பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத
டெல்லி எம்.பி


புதுடெல்லி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஜ்ஜன் குமார் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற 3 பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (DSGMC), பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லி தெற்கு தொகுதி எம்.பி. ராம்வீர் சிங் பிதூரி, டெல்லி மேற்கு தொகுதி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத், வடமேற்கு டெல்லி தொகுதி எம்.பி. யோகேந்தர் சந்தோலியா ஆகியோர், சஜ்ஜன் குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது இல்லத்துக்குச் சென்றனர்.

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது 5 பேரை கொலை செய்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 80 வயதான அவர், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது இல்லத்துக்கு 3 பாஜக எம்.பி.க்கள் சென்றது சீக்கிய அமைப்புகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், 3 எம்.பி.க்களையும் அழைத்து கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் ஹர்மீத் சிங் கல்கா மற்றும் பொதுச்செயலாளர் ஜக்தீப் சிங் கலோன் கூறுகையில்,

1984 சீக்கிய இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளிகளில் சஜ்ஜன் குமார் ஒருவர் என்றும், அவரது செயல்களை எந்த சூழ்நிலையிலும் மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், சஜ்ஜன் குமாரை காங்கிரஸ் கட்சியின் முன்மாதிரி என அக்கட்சியின் தலைவர் தீபேந்தர் ஹூடா குறிப்பிட்டபோதும், தங்களது அமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய அவர்கள், அதேபோல் சஜ்ஜன் குமார் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்த 3 பாஜக எம்.பி.க்களின் செயலையும் தாங்கள் உறுதியாகக் கண்டிப்பதாக தெரிவித்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P