Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே காளியூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் (55), கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நங்கவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் முத்துமாணிக்கத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீரக்கல் மஞ்சள் மெத்தை அருகே உள்ள மாரி கவுண்டர் தோட்டத்தில் அமைந்துள்ள மின்மாற்றியில் இன்று காலை பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய மின்வாரிய பணியாளர்கள் முத்துமாணிக்கத்தை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
மின்மாற்றியில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் மின்மாற்றியிலேயே சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நங்கவள்ளி போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் சடலத்தை மீட்க முயன்றபோது, முத்துமாணிக்கத்தின் உறவினர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் முத்துமாணிக்கத்தின் சடலம் நீண்ட நேரமாக மின்மாற்றியிலேயே தொங்கிய நிலையில் இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சோகத்துடன் சம்பவத்தை பார்த்துச் சென்றனர்.
முத்துமாணிக்கம் மின்வாரியத்தின் நிரந்தர ஊழியர் இல்லை என்பதால், அவருக்கு இழப்பீடு வழங்காமல் மின்வாரியத்தினர் தப்பிக்க முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
முத்துமாணிக்கத்தின் மனைவி கோவிந்தம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
மின்வாரிய பணிக்காக மின்மாற்றியில் ஏறிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் காளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam