உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை – தலைமையாசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
மதுரை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி, அ
தற்கொலை


மதுரை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 சேர்ந்துள்ளார்.

சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி, அதன்பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரை அழைத்து, மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவியை உசிலம்பட்டி அரசு பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக அவரது தாயார் மாணவியுடன் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அப்போது தலைமையாசிரியை முன்பு மாணவியின் தாய் கைகளை கட்டியபடி நின்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட மாணவி, தனது தாயார் கைகளை கட்ட வேண்டாம் எனக் கூறி அவரது கையை தட்டிவிட்டதாகவும், இதனால் தலைமையாசிரியை மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே படித்த பள்ளியில் இருந்து எதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என தலைமையாசிரியை விசாரித்ததாகவும், மறுநாள் மாணவியை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மறுநாள் பூச்சிபட்டி பள்ளிக்குச் சென்ற மாணவி மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அன்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரில், தலைமையாசிரியை முன்பு தாம் கைகளை கட்டி நின்றதை தடுத்த தனது மகளை தலைமையாசிரியை இழிவாக பேசியதால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசு பள்ளி தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam