விருந்தோம்பலுக்கும் ஆரோக்கியமான அரசியலுக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் மூப்பனார் – வைகோ புகழாரம்
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 25-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் பின்புறம் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முதலாவதாக, மதிமு
Vaiko


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 25-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் பின்புறம் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முதலாவதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ உள்ளிட்டோர் ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஜி.கே. மூப்பனாரின் அரசியல் பயணம் மற்றும் தனிப்பட்ட பண்புகளை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.கே. மூப்பனார் அனைவரையும் நேசித்த ஒரு மனிதர். கோடான கோடி மக்களின் மனதை வசீகரித்தவர்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனித உறவுகளை மதித்து வாழ்ந்தவர்.

நேருவின் மறைவுக்குப் பிறகு நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தபோது,

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசித்த காமராஜர், எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

அனைவரும் அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர்.

லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், சில காலத்திலேயே அவர் மறைந்தார்.

இதையடுத்து நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

அப்போது இந்திரா காந்திதான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று ஒரு தமிழன் எடுத்த முடிவுதான் இறுதியானது. அந்த தமிழன் காமராஜர்.

பிரதமராகும் தகுதி இருந்தபோதிலும், காமராஜர் பதவியைத் தேடிச் செல்லவில்லை.

பின்னர் இந்திரா காந்தி பிரதமரான காலத்தில், அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், பக்கபலமாகவும் இருந்தவர் ஜி.கே. மூப்பனார். அவரே பிரதமராகி இருக்கக்கூடிய தகுதியும் செல்வாக்கும் கொண்டவர் என அரசியல் வட்டாரங்களில் பலரும் கூறியுள்ளனர்.

நானும் அரசியலில் மூப்பனாரை பலமுறை விமர்சித்து பேசியிருக்கிறேன். ஆனால், அதையும் தாண்டி அவர் என்னிடம் கொண்டிருந்த அன்பு மறக்க முடியாதது.

நான் விமானத்தில் பயணம் செய்யும்போது, தனது இருக்கைக்கு அருகில் வந்து அமர வைத்திருக்கிறார். பின்னர் தனது காரிலேயே என்னை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார்.

ஒருமுறை தனது பெட்டியை எனக்கு வழங்கினார். அந்த நிகழ்வை இன்றுவரை மறக்க முடியாது. எனது முக்கியமான பொருட்களை இன்றும் அந்தப் பெட்டியில்தான் வைத்து வருகிறேன்.

எம்.ஜி.ஆர். உணவருந்தும்போது முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள் என்று கூறுவார்கள். அதுபோலவே மூப்பனார் உணவருந்தும் நேரத்திலும் ஏராளமானோர் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள்.

நாடாளுமன்றத்திற்கு வரும்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள். விருந்தோம்பலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜி.கே. மூப்பனார்.

ஒரு காலத்தில், மூப்பனாருடன் இணைந்து வருமாறு என்னிடம் பலர் கூறினர். தனியாக கட்சி தொடங்கி நடத்தி வருகிறீர்கள், மூப்பனாருடன் இணைந்து விடலாம் என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால், என்னை நம்பி பலர் வந்துள்ளனர்; அவர்களை விட்டுவிட்டு என்னால் வர முடியாது என்று கூறினேன்.

மூப்பனாரின் இறுதி நாட்களில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தினமும் அவரை சந்தித்துவிட்டுத்தான் நான் செல்வேன்.

தமிழக அரசியலில் ஆரோக்கியமான அரசியலை பின்பற்றியவர்களில் மூப்பனாரும் ஒருவர். அவரது அரசியல் பண்பையும், அணுகுமுறையையும் அவரது மகன் ஜி.கே. வாசனும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

எந்த ஊருக்கு சென்றாலும் எளிமையாக மக்களோடு தரையில் அமரக்கூடியவர் மூப்பனார். அவரது தந்தை பயணித்த அதே பாதையில்தான் இன்றும் ஜி.கே. வாசன் பயணித்து வருகிறார்.

அரசியலில் தோல்விகள் வந்தாலும் அதற்காக கவலைப்படாமல் தொடர்ந்து பயணித்து வருகிறார் ஜி.கே. வாசன். என்னைப் போலவே அரசியல் பயணத்தில் அவர் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறார்.

ஜி.கே. மூப்பனாரின் புகழ் தமிழகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என வைகோ தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ