Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே
ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலரும் விவசாயியுமான பிரகாசத்துக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இங்குள்ள கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கிய அவர், பின்னர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது தண்ணீரில் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மின் மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்காயம் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டனர்.
பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவருக்கு சுமார் 15 வயதும், மற்றொருவருக்கு சுமார் 6 வயதும் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
இதையடுத்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சிறுவர்களும் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam