Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பலவீனப்படுத்த சிலர் தொடர்ந்து பரப்புரை செய்து வருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
பெரிய கட்டமைப்புகளைக் கொண்ட கட்சிகளே தங்களது நீண்டகால வாக்கு வங்கியை இழந்துள்ள நிலையில், விuசிக கூடாரம் காலியாகிவிட்டதாக கூறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உளுந்தூர்பேட்டையில் சிறுத்தைகள் பெருமளவில் திரண்டதாக அவர் தெரிவித்தார்.
விஜய்யின் வருகையால் விசிகவின் வலிமை எந்த வகையிலும் நீர்த்துப்போகவில்லை என்றும் திருமாவளவன் கூறினார். மாநாடு முடிந்ததும் முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் அழைத்து, “சார் மிரட்டீங்க, ஃபயர் சார்” என பாராட்டியதாகவும், மறுநாள் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தபோதும் “ஃபயர் சார், அமேசிங்” என பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
விசிகவை மட்டுமின்றி தனது தலைமைத்துவத்தையும் பலவீனப்படுத்த சிலர் முயற்சிப்பதாக கூறிய திருமாவளவன், வன்னியரசு அமைச்சரானது 30 ஆண்டுகால விசிகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். தாம் அமைச்சராகாமல் வன்னியரசை அமைச்சராக்கியது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் வளர்ச்சியை முன்னெடுக்கும் நோக்கத்தில்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
தவெகவுடன் விசிக இணைந்து பயணிக்கும் என்று மாநாட்டில் அறிவித்தது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து பயணிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற இலக்கை தொட்டுவிட்டோம். ஆளும் கட்சியாக பரிணமிப்போம் என்பதே அடுத்த இலக்கு” என அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அரசியல் இயக்கமாக விசிக தொடர்ந்து செயல்படும் என்றும், இந்துத்துவ சனாதன எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு மற்றும் தமிழ் தேசியத்தை பாதுகாக்கும் களத்தில் உறுதியுடன் இருப்போம் என்றும் திருமாவளவன் கூறினார்.
மேலும், நெருக்கடியான அரசியல் சூழலில் விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளித்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது ஆளுநர் ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும், பாஜக–ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கத்திலும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.
“ஜோசப் விஜயுடன் இருந்து, அவரை மதவாத சக்திகள் பக்கம் செல்லவிடாமல் தடுக்கும் பொறுப்பு விசிகவுக்கு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை இடதுசாரி அமைப்போடு இணைக்க வேண்டிய பொறுப்பும் விசிகவுக்கு உள்ளது” என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam