Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை, மயிலாப்பூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சினிமா நடிகர் வருணின் காரை கள்ளச்சாவி மூலம் திறந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவத்தில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சினிமா நடிகரான வருண் (33), கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மயிலாப்பூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து மீண்டும் காருக்கு வந்த வருண், காரின் உள்ளே வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலி, வைர நகை, விலை உயர்ந்த லேப்டாப், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, தனது காரை மர்மநபர்கள் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடிச் சென்றதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகர் வருண் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பவர் கள்ளச்சாவி மூலம் காரின் கதவை திறந்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜலாலுதீனிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நகைகள் மற்றும் பொருட்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜலாலுதீன் இதேபோன்று கள்ளச்சாவியை பயன்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை திறந்து திருடும் பழக்கமுடையவர் என்றும், அவர் மீது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், நடிகர் வருண், பிரபல சினிமா தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளருமான ஐசரி கணேஸ் என்பவரின் சொந்த அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ