வெலிகொண்டா திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!
பிரகாசம் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பூல சுப்பையா வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இதையொட்டி, பிரகாசம் மாவட்டம் தோர்னாலா மண்டலம் கண்டவானிப்பள்ளி ப
A


பிரகாசம் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பூல சுப்பையா வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, பிரகாசம் மாவட்டம் தோர்னாலா மண்டலம் கண்டவானிப்பள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திட்ட சுரங்கங்களில் இருந்து வெளியேறிய கிருஷ்ணா ஆற்று நீருக்கு சிறப்பு பூஜை செய்து ஜலஹாரதி வழங்கினார்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஃபீடர் கால்வாய் பகுதிக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, நேரடியாக தண்ணீரில் இறங்கி கிருஷ்ணா ஆற்று நீருக்கு பூஜை செய்தார்.

மஞ்சள், குங்குமம் மற்றும் புடவை ஆகியவற்றை சமர்ப்பித்து ஆரத்தி எடுத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக, விழா நடைபெறும் பகுதிக்கு வந்த முதல்-மந்திரிக்கு பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேத பண்டிதர்கள் சார்பில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியின் திருவுருவப் படம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்டது.

சீறிப்பாய்ந்த கிருஷ்ணா நீர்

நெல்லமலை மலைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ள 2 பிரமாண்ட சுரங்கங்கள் வழியாக கிருஷ்ணா ஆற்று நீர் கண்டவானிப்பள்ளி அக்வெடக்ட்டை வந்தடைந்தது. அங்கிருந்து நெல்லமலை சாகர் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் சென்றது.

பல ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு கிருஷ்ணா ஆற்று நீர் வர வேண்டும் என்று எதிர்பார்த்து வந்த மார்க்காபுரம் பகுதி விவசாயிகள், நீர் நீர்த்தேக்கத்தை நோக்கி பாய்ந்து சென்ற காட்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

1.19 லட்சம் ஏக்கர் பாசனம்

வெலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டத்தின் மூலம் 1 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், சுமார் 4 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மேற்கு பிரகாசம் பகுதிகளில் விவசாயம் வளர்ச்சி அடைவதுடன், குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு

வெலிகொண்டா திட்ட தொடக்க விழாவில் அமைச்சர்கள் நிம்மல ராமாநாயுடு, ஆனம் ராமநாராயண ரெட்டி, கொட்டிபாட்டி ரவிக்குமார், கந்துல துர்கேஷ், டி.பி.வி. சுவாமி, அனகானி சத்யபிரசாத், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் மாதவ், நாடாளுமன்ற உறுப்பினர் மாகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர். மேலும், ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து விழாவை சிறப்பித்தனர்.

மூன்று மாவட்ட மக்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளதாகவும், கிருஷ்ணா ஆற்று நீர் தங்கள் பகுதிக்கு வந்திருப்பது விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA