Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவான வெலிகொண்டா பாசனத் திட்டம் தொடங்கப்படுவதையொட்டி, அந்த பகுதி மக்களுக்கு மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
வலசை செல்லும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சியை வரவேற்கும் மார்க்காபுரம் மாவட்ட மக்களுக்கு வெலிகொண்டா திட்ட தொடக்க விழா வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வந்த கனவை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி உள்ளார்.
கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் இந்த பகுதியை வளமான விவசாய நிலமாக மாற்றுவதுடன், பல ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் புளோரைடு பிரச்சினைக்கும் வெலிகொண்டா திட்டம் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்துக்கு தேவையான நீர் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும். மேலும், போதிய நீர் கிடைப்பதால் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயரும்.
வெலிகொண்டா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தங்களது நிலங்களையும், கிராமங்களையும் தியாகம் செய்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மக்கள் நல அரசாக கூட்டணி அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதே எங்களுக்கு கிடைக்கும் உண்மையான பெருமை.
“வெலிகொண்டா நீர்வளம்–வளர்ச்சிக்கு சிறகுகள்” என்பது வெறும் முழக்கம் அல்ல; அது கூட்டணி அரசின் கொள்கை.
வெலிகொண்டா திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரால் மார்க்காபுரம் பகுதி விவசாயம், குடிநீர், தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA