Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 படுக்கைகள் கொண்ட ஏ.ஐ.ஜி. ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆனந்தபுரம் மண்டலம் எண்டாடா பகுதியில் நடைபெற்றது. விழாவில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஏ.ஐ.ஜி. ஆஸ்பத்திரிகளின் தலைவர் மற்றும் பிரபல இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் டி. நாகேஸ்வர ரெட்டியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த ஆஸ்பத்திரி திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஏ.ஐ.ஜி. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்பத்திரி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் 1,000 படுக்கைகள் இருக்கும். இதன் மூலம் வட ஆந்திராவில் முக்கியமான மருத்துவ மையங்களில் ஒன்றாக இந்த ஆஸ்பத்திரி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரி கட்டுமானப் பணிகள் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டத்தில் 650 படுக்கைகள் அமைக்கப்பட்டு, 2028-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் மருத்துவ சேவைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு 350 படுக்கைகள் கொண்ட 2-வது கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்காக 9 ஏக்கர் பரப்பளவிலும், நர்சிங் கல்லூரிக்காக 2½ ஏக்கர் பரப்பளவிலும் கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஐதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏ.ஐ.ஜி. ஆஸ்பத்திரியைப் போன்றே விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியிலும் 8 சிறப்பு மருத்துவ மையங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் இடம்பெற உள்ளன. நவீன மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களும் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான மருத்துவ வளாகமாக இது உருவாக்கப்பட உள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர சட்டசபை சபாநாயகர் சிந்தகாயல அய்யன்னபாத்துடு, விசாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மதுகுமில்லி ஸ்ரீபரத், தெலுங்குதேச கட்சி மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், பீமிலி தொகுதி எம்.எல்.ஏ. கண்டா சீனிவாசராவ், எம்.எல்.ஏ. கணபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏ.ஐ.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் துணைத்தலைவர் பி.வி.எஸ். ராஜு, இயக்குனர் ஜி.வி. ராவ், தலைமை செயல் அதிகாரி சாம் ரிஸ்வி, மாவட்ட கலெக்டர் அபிஷிக்த் கிஷோர், போலீஸ் கமிஷனர் டாக்டர் சங்கப்ரத பாக்சி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA