இலவச வேட்டி திட்டத்தில் 8 முழத்துக்கு பதில் 4 முழம் - ஆஸ்டின் கேள்விக்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதில்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டசபையில் இலவச வேட்டி திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதிலாக 4 முழம் வேட்டி வழங்கும் அரசின் முடிவு குறித்து திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ஆஸ்டின், இந
அமைச்சர் விஜய் பாலாஜி


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டசபையில் இலவச வேட்டி திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதிலாக 4 முழம் வேட்டி வழங்கும் அரசின் முடிவு குறித்து திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய ஆஸ்டின், இந்தத் திட்டம் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது வேட்டியின் அளவு குறைக்கப்பட்டதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 சரகங்களில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, மக்களுக்கு பிடித்தமான பொருளை தரமாக வழங்குவதே அரசின் நோக்கம் என்றார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொங்கலுக்கு வழங்கப்படும் புதிய வேட்டிகளை அமைச்சர்களே அணிந்து வருவோம் என்றும், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சியினர் அணியட்டும் என்றும் கூறிய அமைச்சர், எது தரமான வேட்டி என்பதை பொதுமக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.

மக்கள் 8 முழ வேட்டியை விட 4 முழ வேட்டியைத்தான் விரும்புகிறார்கள் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam