காவிரி ஆணைய உத்தரவையும் மதிக்காத கர்நாடகம் -55 டிஎம்சி நீர் பாக்கி - பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி?
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், ஜூன் மாதம் முதல் தமிழ்நாட்டிற்கு வழங்க
Anbumani


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், ஜூன் மாதம் முதல் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரில் இதுவரை 55 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளதாகவும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. பல நாட்கள் அந்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என மீண்டும் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், ஆகஸ்ட் 27 முதல் 30-ஆம் தேதி வரையிலான 4 நாட்களிலும் ஆணையம் உத்தரவிட்ட அளவை விட குறைவான நீரே பிலிகுண்டுலு அளவை நிலையத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வர வேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே வந்துள்ளது. அதேபோல், வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வர வேண்டிய நிலையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி 7,454 கனஅடி, 28-ஆம் தேதி 7,094 கனஅடி, 29-ஆம் தேதி 6,702 கனஅடி மற்றும் 30-ஆம் தேதி 6,887 கனஅடி மட்டுமே நீர் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தினமும் சுமார் 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறி வரும் நிலையில், அதில் பாதியளவுக்கு மட்டுமே பிலிகுண்டுலுவுக்கு நீர் வந்து சேர்ந்திருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலு வரை நீர் பயணிக்கும் பாதையில் அதிகபட்சம் 1 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள அவர், தினமும் 20 முதல் 25 சதவீதம் வரை குறைவாக நீர் வந்திருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதாக கணக்கு காட்டிவிட்டு, அந்த நீரை வேறு பயன்பாட்டுக்கு கர்நாடக அரசு திருப்பிவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி மற்றும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை 40.10 டிஎம்சி என மொத்தம் 80.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜூன் மாதத்தில் 2.91 டிஎம்சி, ஜூலையில் 0.71 டிஎம்சி மற்றும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை 21.9 டிஎம்சி என மொத்தம் 25.58 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இதன்படி, ஜூன் மாதம் முதல் இதுவரை 55 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் சுமார் 82 டிஎம்சி தண்ணீர் இருப்பதாகவும், 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழ்நாட்டிற்கு உரிய அளவு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தயக்கம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதே இத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டிய பிறகு எந்த அளவுக்கு தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என பாமக தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அணையில் தற்போது உள்ள 52 டிஎம்சி நீரைக் கொண்டு 40 நாட்களுக்கு கூட பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்திடம் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைப் பெற்றால்தான் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

எனவே, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்தின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ