Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி குறித்து கேள்வி எழுப்பினார்.
கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டட வசதி மற்றும் மாலை நேர வகுப்புகளை தொடங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கபாலீஸ்வரர் கல்லூரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வக வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.30.75 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும், பணிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், அக்கல்லூரியில் மாலை நேர வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்தில் உள்ளதாகவும், இது குறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b