எத்திராஜ் கல்லூரி அருகே குடியிருப்பில் தரைக்கு கீழே பதுங்கியிருந்த நல்ல பாம்பு குட்டிகள்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச) எழும்பூரில் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள குடியிருப்பு ஒன்றின் பயன்படுத்தப்படாத பின்புறப் பகுதியில் நல்ல பாம்பு முட்டைகள் பொறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்கிரீட் பிளவுகளை த
Nn


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)

எழும்பூரில் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள குடியிருப்பு ஒன்றின் பயன்படுத்தப்படாத பின்புறப் பகுதியில் நல்ல பாம்பு முட்டைகள் பொறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்கிரீட் பிளவுகளை தோண்டி நடத்திய சுமார் 4 மணி நேர தேடுதலில், 19 நல்ல பாம்பு குட்டிகளை வனத்துறை ஊழியர்கள் மீட்டனர். மீதமுள்ள குட்டிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு குடியிருப்பின் பயன்படுத்தப்படாத பின்புறப் பகுதியில் நேற்று மதியம் வீட்டின் உரிமையாளர் சில சந்தேகத்திற்கிடமான முட்டைகளை கண்டுள்ளார். இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் கிண்டி வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு காணப்பட்டவை நல்ல பாம்பின் முட்டைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக ஆய்வு செய்த வனத்துறையினர், தரைக்கு கீழே ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 நல்ல பாம்பு முட்டைகள் பொறிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த முட்டைகள் அனைத்தும் பொறிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், பாம்பு குட்டிகள் அந்தப் பயன்படுத்தப்படாத பகுதியின் தரைக்கு கீழ் பதுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதனைத் தொடர்ந்து கான்கிரீட் தரையில் ஏற்பட்டிருந்த பிளவுகள் மற்றும் இடுக்குகளை வனத்துறை ஊழியர்கள் தோண்டி அகற்றி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற தீவிர தேடுதலின் போது, ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 19 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டன.

இரவு நேரமாகிவிட்டதால், மீதமுள்ள பாம்பு குட்டிகளை தேடும் பணியை முழுமையாக மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீட்கப்பட்ட 19 நல்ல பாம்பு குட்டிகளையும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக பிடித்து, செங்கல்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

இதற்கிடையில், பொறிக்கப்பட்ட 39 முட்டைகளில் இருந்து 19 குட்டிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 20 நல்ல பாம்பு குட்டிகளும் அதே குடியிருப்பின் தரைக்கு கீழ் அல்லது பயன்படுத்தப்படாத பிற பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால், மீதமுள்ள பாம்பு குட்டிகளை மீட்பதற்காக வனத்துறை ஊழியர்கள் இன்று மீண்டும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.

குறிப்பாக, சுமார் 10 நாட்களுக்கு முன்பு இதே குடியிருப்பில் இருந்து பெரிய அளவிலான பெண் நல்ல பாம்பு ஒன்றை வனத்துறையினர் மீட்டிருந்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள பாம்பு குட்டிகள், அந்த பெண் நல்ல பாம்பின் குட்டிகளாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் தரைக்கு கீழ் ஏராளமான நல்ல பாம்பு குட்டிகள் பதுங்கியிருந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ