FQL ஏஜெண்ட் வீட்டின் செப்டிக் டேங்கில் பணம் பதுக்கியதாக வதந்தி – போலீசார் தோண்டியதால் பரபரப்பு
திண்டுக்கல், 31 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், நத்தம்: நத்தம் அருகே FQL, VG ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஏஜெண்ட் ஒருவரின் வீட்டில் உள்ள செப்டிக்
Fql


திண்டுக்கல், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்: நத்தம் அருகே FQL, VG ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஏஜெண்ட் ஒருவரின் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நத்தம், காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் FQL, VG ஆன்லைன் செயலி மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக ஏஜெண்டுகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகளில் ஒருவரான ரமேஷின் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதையடுத்து ஏஜெண்டுகளின் வீடுகளை பொதுமக்கள் சுற்றிப் பார்த்த நிலையில், ரமேஷின் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கையும் தோண்டி சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இன்று செப்டிக் டேங்கை தோண்டி சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் செப்டிக் டேங்கிற்குள் பணம் ஏதும் கிடைக்கவில்லை. கற்கள் மற்றும் மணல் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக எதிர்பார்த்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நத்தம் அருகே பல மணி நேரமாக பரபரப்பான சூழல் நிலவியது.

மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam