Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
FQL மற்றும் VG Trading செயலிகள் மூலம் பிட்காயின், பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களைப் பெற தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் FQL மற்றும் VG Trading செயலிகள் மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், FQL மோசடி தொடர்பாக ஏராளமானோர் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெறுவதற்காக தனி அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கைக்காக அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் மனு அளிக்க வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காந்தி அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P