அரியானா மாநிலம் கழிவறை கோப்பைக்குள் பதுங்கிய 6 அடி நீள நாகப்பாம்பு
சண்டிகர் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.) அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள காடோலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து தொடர்ந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு
A


சண்டிகர் , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள

காடோலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து தொடர்ந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர் அனில் காந்தாஸ் தலைமையிலான மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கழிவறை கோப்பையை ஆய்வு செய்தபோது, அதன் உட்புறத்தில் இருந்த குறுகிய இடைவெளியில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.

பாம்பை நேரடியாக வெளியே எடுக்க முடியாததால், மீட்புக்குழுவினர் கழிவறை இருக்கையை மிகுந்த கவனத்துடன் உடைத்து பாம்பை வெளியே எடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, நாகப்பாம்பு எந்தவித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டது.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், நகரமயமாக்கல் காரணமாக பாம்புகளின் இயற்கையான வாழ்விடங்கள் அழிந்து வருவதால், உணவு மற்றும் தங்குமிடத்தைத் தேடி அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.

கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதுடன், பாம்புகள் தென்பட்டால் அவற்றை பிடிக்க முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறையினர் அல்லது பாம்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA