Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை ரத்து செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 2023-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை புது நகரமாக உருவாக்கும் வகையில், 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி காஞ்சிபுரம் புது நகர் பகுதி வரையறுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற வளர்ச்சியை திட்டமிட்டு மேற்கொள்வதுடன், காஞ்சிபுரத்தின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான CMDA-வின் நிதிநிலை தொடர்பான சுமைகள் மற்றும் எதிர்கால நிதித் தேவைகளை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான தேவையற்ற கட்டுமானத் திட்டங்களை தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மாற்றாக, Land Pooling எனப்படும் நில ஒருங்கிணைப்பு முறைக்கும், திட்ட அனுமதி வழங்கும் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவால் காஞ்சிபுரம் புது நகர் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் எதிர்கால நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளின் நிலை குறித்தும் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam