Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணத்தை “Personal Cash Register” என்ற தனிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் தினமும் தங்களிடம் இருக்கும் சொந்த ரொக்கப் பணத்தின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவேடு, வருகைப் பதிவேட்டுடன் இணைத்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலுடன் கண்காணிப்பாளரால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
மேலும், அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதத்திற்கு இருமுறை கள ஆய்வு செய்து பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவேட்டை முறையாக பராமரிக்கத் தவறினால், அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டை பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் தங்களது தேவைக்கு அதிகமான ரொக்கப் பணத்தை அலுவலகத்தில் கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் ஆய்வின்போது பதிவேட்டை அலுவலகத் தலைவர் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam