கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற்றார் ஸ்டாலின்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச) கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத
Vs babu


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச)

கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை சரிபார்த்தபோது முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 100 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் காலக்கெடு முடிவடைந்த பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாக ஸ்டாலின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சரிபார்ப்பின்போது கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் முரண்பாடுகளின் அடிப்படையில், வி.எஸ். பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோருவது என்றால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என வாதிடப்பட்டது. தற்போதைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதேபோன்ற கோரிக்கைகளுடன் மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மு.க. ஸ்டாலின் தரப்பு வாபஸ் பெற்றது.

அதேவேளையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து புதிதாக வழக்கு தொடருவதற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது.

Hindusthan Samachar / P YUVARAJ