Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு நிலைத்தன்மை குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐவர் கொண்ட அணை மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை மூன்று நாட்கள் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தேசிய நீர்மின் கழகத்தின் முன்னாள் தலைவரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான பல்ராஜ் ஜோஷி தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
இந்த குழுவில் தேசிய நீர்மின் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் கோபால் தவான், ரூர்க்கி ஐ.ஐ.டி.யின் நிலநடுக்க பொறியியல் துறை பேராசிரியரும், அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் தலைவருமான எம்.எல். சர்மா, கங்கை வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவரும், முல்லைப் பெரியாறு அணையின் முதன்மை கண்காணிப்பு குழுவின் முன்னாள் தலைவருமான குல்ஷன் ராஜ், ஒடிசா நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளரும் சிறப்புச் செயலாளருமான அசுதோஷ் டாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வின்போது முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, அணையின் மதகுகள், சுரங்கப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் நேரில் ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், அணைப் பகுதியில் மழையளவை பதிவு செய்யும் மழைமானி கருவிகள் மற்றும் நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்யும் சீஸ்மோகிராஃப் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.
ஆய்வுக்காக பொறியாளர் மதிப்பீட்டுக் குழுவினர் செப்டம்பர் 1-ம் தேதி தேக்கடிக்கு வருகை தருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் குழுவினர், செப்டம்பர் 4-ம் தேதி தேக்கடியில் இருந்து டெல்லி புறப்பட உள்ளனர்.
ஆய்வின் போது சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் அணையின் தற்போதைய பாதுகாப்பு நிலை தொடர்பான விவரங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்படும். இந்த ஆய்வறிக்கை மத்திய அரசு, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மத்திய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மத்திய பொறியாளர்கள் குழுவின் வருகை மற்றும் ஆய்வுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ